My Photo
Name:
Location: coimbatore, Tamilnadu, India

Sunday, July 11, 2010

ழகரம் ழகரம் தமிழகரம்
தமிழின் அழகே எழிழகரம்

ஆழியில் பொழியும் மழையே ழகரம்
விழியில் வழியும் அமிழ்தே ழகரம்
மகிழ்ச்சியில் பழுக்கும் பழமே ழகரம்
நெகிழ்ச்சியில் தழைக்கும் நிழலே ழகரம்

உழவும் தொழிலும் கமழ்ந்திடும் ழகரம்
மழுவும் கழிவும் கழிந்திடும் ழகரம்
வாழ்வும் தாழ்வும் பிறழும் ழகரம்
பழுதும் விழுதும் ஒழியும் ழகரம்

தொழுகையும் அழுகையும் வாழ்வின் வழக்கம்
எழுகையும் முழுகையும் முழவின் முழக்கம்
வாழையும் தாழையும் செழிப்பின் பழக்கம்
கோழையும் மோழையும் அழிவின் புழுக்கம்

வாழ்வென்னும் வழியில் குழிகள் பழிகள்
காழ்ப்பென்னும் சுழியில் பழுதுகள் விழுதுகள்
தாழ்வென்னும் தகழியில் தழைகள் பிழைகள்
வீழ்கென எழும்பும் வேழமும் சூழுமும்

தாழ்ப்பாழ் அழுந்திட நழுவிடும் பொழுதினில்
கொழுந்தென எழுந்திடும் பழமையின் பொழில்கள்
தழுவிடத் தழுவிட அவிழ்ந்திடும் எழில்கள்
வழிந்திடும் விழியில் அமிழ்ந்திடும் அமிழ்து

வாழைப் பழச்சாறோ இதழின் உமிழ்ச்சாறோ
தாழைப் புழையூரில் பொழியும் கூழாறோ
தாழப் பழுவூரில் இழையும் குழலேறோ
ஆழப் புகழூரில் தழையும் மழை ஊற்றோ

நிகழும் பொழுதெல்லாம் உழைப்பின் இழையன்றோ
திகழும் செழுப்பெல்லாம் மழையின் பொழிவன்றோ
மழலைச் சிமிழ்எல்லாம் மகிழ்வின் விழையனறோ
தமிழின் புகழ்எல்லாம் செம்மொழி வழியன்றோ

Labels:

0 Comments:

Post a Comment

<< Home